கொடைக்கானலில் மோசடி செய்த கும்பல் web
குற்றம்

கொடைக்கானல்| ’மொபைலில் வரும் கதைகளை படித்தாலே வருமானம்..’ 300-க்கும் மேற்பட்டோரிடம் 1 கோடி மோசடி!

கொடைக்கானலில் வருமானத்திற்கு உதவி செய்வதாக கூறி மொபைல் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டம் செய்கிறோம் என்ற பெயரில், வீடு வீடாக சென்று, மொபைல் அப்ளிகேஷனில் கதை படித்தால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டி விளம்பரப்படுத்தி, வங்கி பரிவர்த்தனை மூலம் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் மோசடி செய்ய இறங்கியுள்ள கும்பல் குறித்து அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடி கும்பல்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, ஒரு கும்பல் வீடு வீடாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டம் செய்கிறோம் என்று, இலவச பரிசு பொருட்களுடன் அணுகியுள்ளது.

பரவாயில்லை வீடு தேடிவந்து இலவசம் தருகிறார்களே என்று ஏமாந்த, பெண்களை நோக்கி குறி வைத்து இறங்கிய இந்த கும்பல், பின்னர் 20,000 ரூபாய் பணம் கட்டி மொபைல் அப்ளிகேஷனில் வரும் கதைகளைப் படித்தால், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என பேராசை காட்டியுள்ளது.

மொபைல் அப்ளிகேஷன் மூலம் மோசடி

மேலும் ஒருவர் சேர்ந்தால் அவருக்கு கீழ் 15 பேரை சேர்க்க வேண்டும் என, அந்த மோசடி கும்பல் பெண்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, அதற்கு கீழ் 15 பேர் அதற்கும் கீழ் 15 பேர் என சேர்க்கச்சொல்ல, எம்எல்எம் பாணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்கள், கொடைக்கானல் நகர் பகுதிகளில் பெருமளவு சேர்ந்திருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் பல லட்சங்களை கட்டி சில நாட்கள் வருமானமும் ஈட்டி உள்ளனர். முதலில் சேர்பவர்கள், கட்டிய பணத்திற்கு ஈடு தொகை வங்கியின் மூலம் வரத்து வாங்கியவுடன், மேலும் கூடுதல் நபர்களை சேர்த்து தாங்களும் கூடுதலாக முதலீடு செய்து கொண்டே வந்துள்ளனர். இந்த பணப்பரிவர்த்தனையை யூபிஐ மூலம் ஒருங்கிணைத்த அந்த மோசடி கூட்டம், அவர்கள் எதிர்பார்த்த பெருந்தொகை மொத்தமாக வந்தவுடன், மொபைல் அப்ளிகேஷனையும் வங்கி கணக்குகளையும், ஒரே இரவில் முடக்கி விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறுகின்றனர்.

கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டும் சேர்ந்துள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து சுமார் ஒரு கோடிக்கு மேல் அந்த மோசடி கும்பல் சுருட்டியதாகவும், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 600-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்ததாகவும் கூறப்படுகிறது. ஏமாற்றமடைந்த இவர்கள் தற்போது விழிப்புற்று சைபர் கிரைம் போலீஸ் மூலம், இழந்த பணத்தை மீட்க முயற்சித்து வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனை, ஆன்லைன் வேலை வாய்ப்புகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு மோசடி கும்பல், இதுபோல் கிளம்பி அப்பாவி ஏழை எளிய மக்களை குறிவைத்து செயல்பட்டு வருவதை காவல்துறையும் கண்காணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் துவங்கியுள்ளது.