குற்றம்

சென்னை: ஏரியா தாண்டி போதை மாத்திரைகளை விற்றதால் ஆத்திரம்; நண்பரை தீர்த்துக்கட்டிய கும்பல்

சென்னை: ஏரியா தாண்டி போதை மாத்திரைகளை விற்றதால் ஆத்திரம்; நண்பரை தீர்த்துக்கட்டிய கும்பல்

JustinDurai
சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்துவிட்டு ஆற்றில் வீசிச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
சென்னை அடையாறில் வசித்து வந்தவர் மகேஷ்வரன். இவரை கடந்த 4ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது தாய் பஞ்சவர்ணம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், பட்டினம்பாக்கம் கடற்கரையில் மகேஷ்வரனின் சடலம் ஒதுங்கியது. இதனிடையே ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கார்த்திக் என்பவர் வழக்கறிஞர் ஒருவரை அணுகி மகேஷ்வரனை தான்தான் கொன்றதாகவும் சரணடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனே வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்ட நேரத்தில் கார்த்திக் தப்பியோடியதாக தெரிகிறது. செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து மேடவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், விக்கி, தர்மா ஆகியோர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
கைதான 4 பேரும் உயிரிழந்த மகேஷ்வரனின் நண்பர்கள் ஆவர். சென்னையை ஆறு பகுதிகளாக பிரித்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த வகையில், மகேஷ்வரனுக்கு மேடவாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி மயிலாப்பூர் உள்பட பல இடங்களில் போதை மாத்திரைகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது. ஏரியா விட்டு ஏரியா சென்று விற்பனையில் ஈடுபட வேண்டாம் என்று மகேஷ்வரனை கார்த்திக் உள்ளிட்டோர் கண்டித்ததாக தெரிகிறது. எனினும் அதை பொருட்படுத்தாமல் போதை மாத்திரையை விற்று வந்த மகேஷ்வரனை தீர்த்துக் கட்ட கார்த்திக் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 4ஆம் தேதி கஞ்சா புகைப்பதற்காக மகேஷ்வரனை, அழைத்து கார்த்திக் உள்ளிட்டவர்கள் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர் கத்தி மற்றும் செல்போனை ஆற்றில் வீசிவிட்டு தப்பியோடியதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக, கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.