திண்டுக்கல்லில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கூலித்தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர் அருள்சாமி. இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி பிரின்ஸ்சியா அதிமுக பிரமுகர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒருமகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை தனது மகளை பழனி சாலையில் உள்ள முருகபவனத்தில் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரா நகர் அருகே வரும்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அருள்சாமியை வெட்ட வந்தனர்.
இதனையடுத்து அதைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடினார் அருள்சாமி. ஆனால் விடாமல் விரட்டிச் சென்ற மர்மகும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, உடனே தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.