குற்றம்

தெருவில் சுற்றித்திரிந்த நாய் மீது தேசிய கொடி... சிசிடிவி அடிப்படையில் காவல்துறை அதிரடி!

webteam

தெருவில் சுற்றித்திரிந்த நாயின் மீது தேசிய கொடியை கட்டி அவமரியாதை செய்ததாக கூறி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரொருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரசு பேருந்து பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் தெருவில் சுற்றித்திரிந்த நாயின் மீது தேசிய கொடி கட்டி இருந்த நிலையில் சுற்றித்திரிந்தது. இந்நிலையில் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி தேசியக்கொடியை அவமரியாதை செய்ததாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து தேசிய கொடியை நாய்க்கு கட்டிவிட்ட நபரை காவல்துறையினர் தேடி வந்தனர். தொடர் விசாரணையில் தேசியக்கொடி கட்டி நாய் சுற்றித்திரிந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெரியகுளம் அருகே உள்ள நேரு நகர் பகுதியில் வசிக்கும் காமாட்சி என்பவர் மது போதையில் தெருவில் சுற்றித்திரிந்த நாயை பிஸ்கட் போட்டு அழைத்துச் சென்று தேசிய கொடியை, அதன் மேல் கட்டி விட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை இன்று கைது செய்த வடகரை காவல்துறையினர், `தேசிய கொடியை நாய் மீது கட்டிவிட்டு அவமரியாதை’ செய்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் சாட்சிகளின் அடிப்படையில் அவர் மது போதையில், இதை செய்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வழக்கு பதிவு மட்டும் செய்த நிலையில், அவரை காவல் நிலைய ஜாமீனில் விடிவித்துள்ளனர்.

தேசிய கொடியை இதுபோன்று செல்லப்பிராணிகள் மீதோ மிருகங்கள் மீதோ கட்டிவிட்டு அவமரியாதை செய்பவர்கள் மீது இந்திய சட்டத்தின் படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.