பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ சட்டம் (POCSO Act) 2012 செயல்படுத்தப்பட்டபோது ஆய்வு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வுகள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு, மீண்ட குழந்தைகளைப் பற்றியதாகும். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஆய்வுகள் நடத்தியபோது, அதில் பொதுவாக காணப்பட்ட விஷயம் என்பது அவர்களில் யாரும் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை பற்றி காவல்துறையில் புகாரளிக்கவோ அல்லது பெற்றோருக்குத் தெரியப்படுத்தவோ இல்லை என்பது. ஏனென்றால் சமூகத்தால் அவர்கள் குடும்பத்திற்கு ஏதேனும் களங்கம் ஏற்படுமோ என்று பயந்து வாழ்ந்தனர் என்பது குழந்தைகள் உரிமை தொண்டு நிறுவனமான HAQ Centre for Child Rights (Delhi) மற்றும் FACSE (Mumbai), யூனிசெஃப் ஆதரவுடன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற பாலியல் கொடுமைகள் குறித்து, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் எழுதப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆய்வறிக்கை குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட பிள்ளைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். இது, மற்ற குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் நேர்ந்த இது போன்ற கொடுமையான சம்பவங்களில் இருந்து மீண்டு(ம்) வருவதற்கும் உதவியாக இருக்கும் என்கின்றனர் பாதிப்பில் இருந்து மீண்ட குழந்தைகள். அதில் சில...
‘சீண்டல்களை பாசத்தின் வெளிப்பாடு என நினைத்துவிட்டேன்’
பாலியல் குற்றம் புரிபவர்கள் ஒருவரின் குடும்பத்தின் உள்ளேயே இருந்தால் அது மிகவும் கொடுமையான ஒன்று. குழந்தை பருவத்தின் போது அவர்களுக்கு பாசம் எது, வேஷம் எது என்பதை அறிந்து கொள்வது சற்றே கடினமான விஷயம். பாசம் காட்டுவது போல் குழந்தைகளிடம் அக்குடும்பத்தை சேர்ந்தவர்களே தவறாக நடந்து கொள்கின்றனர். அந்த வரிசையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்ட ஒரு சிறுமி கூறுகையில், ‘என் குடும்பத்தில் ஒருவர் என்னிடம் அவ்வாறு நடந்துகொண்ட போது, நான் அதுதான் பாசத்தின் வெளிப்பாடு என கருதினேன்’ என்றுள்ளார்.
இந்தச் சிறுமி அவரின் குடும்பத்தை சார்ந்த ஒரு நபராலேயே 3 வருடங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, தான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபரால் பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளானார் இந்தச் சிறுமி. ‘நான் வளரவளரதான் இவை அனைத்தும் பாசத்தின் வெளிப்பாடல்ல, பாலியல் துன்புறுத்தல்கள் என்பதை உணர்ந்து, வேதனையின்
உச்சக்கட்டத்திற்கு சென்றேன். இதற்காக நான் என்மீதேதான் பழி கூறிக்கொண்டேன். பாசத்துக்கும், சீண்டலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்ந்தேன். இதைப் பற்றி என் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். ஆனால் அதன் விளைவுகளை நினைத்து பயந்து எதையும் வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டேன்’என்றுள்ளார்.
‘என் தாத்தாவே என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்’
தன் சொந்த பேத்தியையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் ஒரு கொடூர முதியவர். தன் மூன்றாம் வகுப்பில் சக மாணவராலேயே முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தச் சிறுமி, 4ஆம் வகுப்பில் படிக்கும் போது இரண்டாவதாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பின், தன் 18 வயதில், தனது சொந்த தாத்தாவே அந்தச் சிறுமியை பாலியல் துன்புறுத்தியுள்ளார். ‘இந்தச் சம்பவங்கள் பற்றி நான் யாரிடமும் பகிர்ந்துக் கொண்டதில்லை. முதல் சம்பவத்தின்போது என் அம்மாவிடம் கூற மிகவும் பயந்தேன். இரண்டாவது சம்பவத்தில், என் அம்மாவிடம் கூறும் மன தைரியம் வந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, என் அம்மாவை அவரது சிறு வயதில் என் தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் நானும் விதிவிலக்கல்ல. இதனால், என் அம்மாவிடம் இதை பற்றி கூற தயங்கினேன். அதனால், என் குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் இருந்து விலகியே இருந்தேன். இதிலிருந்து விடுபட நினைத்தாலும் என்னால் சற்றும் முடியவில்லை, மேலும் நான் மன அழுத்தால் பெரிதும் பாதிக்கபட்டிருக்கிறேன். ஆகவே எனக்கு ஒரு மனநல ஆலோசகர் தேவைப்படுகிறார்’என்று மனம் திறந்து பேசியுள்ளார் இச்சிறுமி.
‘மிகமிக சங்கடமான அனுபவங்கள்’
தன் வீட்டில் ஓட்டுநராக பணிப்புரியும் ஒரு நபராலேயே இந்தச் சிறுவன் 4ஆம் வகுப்பு பயிலும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளான். பின் 9ஆம் வகுப்பு பயில்கையில் டியூஷன் செல்லும் போது லிப்ட் ஆபரேட்டரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளான். ‘இச்சம்பவங்கள் என்னை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளியது. ஓரினச்சேர்க்கை போல எனக்கு தோன்றியது. இதைபற்றி என் பெற்றோரிடமும் நான் பகிர்ந்துக்கொண்டதில்லை’ என்று பேசியுள்ளான் ஒரு சிறுவன்.
‘பயத்தை விட குழப்பங்களால் சூழப்பட்டேன்’
தன் 11 வயதில் கிரிக்கெட் முகாமிற்கு சென்றுள்ளான் ஒரு சிறுவன். அவனது 16 வயதில் ஒரு பயணத்தின் போதும் இச்சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளான். இச்சம்பவம் பற்றியும் யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறான். ‘பயத்தை விட குழப்பங்களே என்னை பெரிதும் சூழ்ந்தன. இப்போது கூட இதை பற்றி நான் வெளிப்படையாக கூறியதற்கு காரணம், இதை நான் துன்பமாக கருதவில்லை; எனினும் பெற்றோரிடம் இது பற்றி தெரியப்படுத்துவதில் எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை’ என்றுள்ளான்.
இப்படி எத்தனையோ குழந்தைகள் நாட்டில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகிறார்கள். கூடிய விரைவில் இது போன்ற சம்பவங்களில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இந்தச் சமூகம் விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.