சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்வர்பாஷா (76). அலுமினிய பொருட்கள் வியாபாரம் செய்து வந்த இவர், வியாபாரத்திற்கு சென்ற இடத்தில் தந்தையை இழந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமியை அவ்வப்போது கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்துள்ளார். வயது முதிர்வு காரணமாக சிறுமியை அன்வர்பாஷா அழைத்துச் செல்வதை சிறுமியின் தாய் மற்றும் அப்பகுதி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திய அவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கடந்தாண்டு சிறுமிக்கு வீட்டில் வைத்து ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னரே அன்வர்பாஷா பாலியல் வன்கொடுமை செய்தது சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் அன்வர்பாஷாவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதாகக் கூறி கடத்திச் சென்றதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல் துறையினர் அன்வர்பாஷாவை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.