விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பசியால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவனை இருவர் தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
விழுப்புத்தில் தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் (அயர்ன்) தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் கடந்த 15ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் உணவு மற்றும் தண்ணீர் எதுவும் குடல் பகுதியில் இல்லாமல் போனதே சிறுவனின் இறப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் உயிரிழந்த சிறுவன் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இரண்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில் இரண்டு இடங்களில் இரண்டு நபர்கள் நடந்து வருகின்றனர். அதில் ஒரு நபர் ஒரு சிறுவனை சுமந்து வரும் காட்சியும், பின்னர் அவர் கையில் ஒரு கை தடியோ அல்லது இரும்பு பைப்பையோ தூக்கிவரும் காட்சி வெளியாகி உள்ளது. மற்றொரு சிசிடிவி காட்சியில் குழந்தை உடல் மீட்கப்பட்ட இடத்தில் சிறுவனை அவர்கள் தூக்கி வருகின்ற அந்த காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சிறுவனின் இறப்பில் துப்புத் துலங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.