குற்றம்

கோவை: ஆன்லைனில் சைக்கிள் வாங்கிய பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.93,000 திருட்டு

கோவை: ஆன்லைனில் சைக்கிள் வாங்கிய பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.93,000 திருட்டு

Sinekadhara

கோவையில் ஆன்லைனில் சைக்கிள் வாங்கிய பெண்ணின் யு.பி.ஐ., பரிவர்த்தனை மூலம் வங்கிக் கணக்கில் இருந்து 93 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கேஷ். இவரது மனைவி லேக்கிகா (39). கடந்த ஜனவரி மாதம் தனது மகனுக்கு ஆன்லைன் மூலம் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்காக பதிவு செய்திருக்கிறார். இதற்காக 1,699 ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவருக்கு சைக்கிள் வரவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தை பார்த்தபோது அதில் கஸ்டமர் கேர் எண் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்ததைப் பார்த்திருக்கிறார். அந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது எந்த செல்போனில் இருந்து பணம் அனுப்பினீர்கள் மற்றும் கூகுள் பே அல்லது போன் பே எண்களை கேட்டுள்ளனர்.

இதையடுத்து அவர் அந்த எண்களை கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அந்த லிங்க்கை திறந்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை கொடுத்த சில வினாடிகளில் அவரது செல்போனுக்கு ஓடிபி எண் வந்திருக்கிறது. அந்த ஓடிபி எண்ணையும் அதில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து பல தவணைகளாக யு.பி.ஐ., மூலம் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 93 ஆயிரத்து 169 ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லேக்கிகா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.