குற்றம்

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தொடரும் கொடூரம்!

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தொடரும் கொடூரம்!

webteam

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், வட மாநிலங்களில் அதிகரித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கத்துவா சம்பவத்துக்குப் பிறகு இந்த குற்றத்துக்கு எதிரான போராட்டங்கள், கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அங்குள்ள இடா (Etah ) மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியளித்தது. அந்தச் சுவடு காய்வதற்குள், அதே மாவட்டத்தில் இன்று அதிகாலை இன்னொரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் உள்ளது அலிகஞ்ச். இங்குள்ள கெல்தா கிராமத்தில் திருமணம் ஒன்று இன்று நடக்க இருக்கிறது. இதற்கு முந்தைய வரவேற்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்றனர். விழா முடிந்து இரவில் வீடு திரும்ப நினைக்கும்போது, ஒரு குடும்பத்தினரின் 9 வயது குழந்தையை காணவில்லை. எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. உறவினர்களுக்கும் அவள் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. 

பிறகு பத்து மணியளவில் போலீசில் புகார் செய்தனர். புகார் செய்துவிட்டு அக்கம் பக்கம் முழுவதும் விடிய விடிய தேடினர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் திருமண வீட்டுக்கு நூறு அடி தூரத்தில் உள்ள நிலத்தில் அந்தக் குழந்தை சடலமாகக் கிடந்துள்ளது. இதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலில் ஏராளமான ரத்தக் காயங்கள் இருந்தன. பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரித்து பின்டு குமார் (22) என்பவனை பிடித்தனர். அதே ஊரைச் சேர்ந்த அவன் போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.