குற்றம்

“சென்னையில் சரமாரியாக வெட்டி வழிப்பறி” - இரக்கமற்ற கொடூரன்கள் கைது..!

“சென்னையில் சரமாரியாக வெட்டி வழிப்பறி” - இரக்கமற்ற கொடூரன்கள் கைது..!

webteam

சென்னையில் அப்பாவி தாய் மற்றும் மகன் உட்பட 4 பேரை சரமாரியாக கத்தியால் வெட்டிய 8 கொடூரன்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பருவா நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அறம்மாள். இவர் தனது வீட்டருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு அடையாளம் தெரியாத 8 பேர் வந்தனர். அதில் ஒருவர் ரத்தம் படிந்த சுமார் 1 அடி நீளமான கத்தி மற்றும் தனது கைகளில் இருந்த ரத்தக்கரையை அந்த குழாயில் இருந்து வரும் தண்ணீரில் கழுவினார். இதனை கண்ட அறம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

அத்துடன் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை, ரத்தை கழுவுவதாக என அந்த நபரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் அந்த நபருக்கும், அறம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. இதனால் கோபமடைந்த அந்த நபர் அறம்மாளை பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்று அதே கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த அவரது மகன் அருண் என்பவரையும் வெட்டிவிட்டு அந்த 8 பேரும் தப்பியோடி விட்டனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அறம்மாளை கத்தியால் வெட்டியது மணி என்கிற வாண்டுமணி என்றும், அந்த நபருடன் வந்தது தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான அஜித், சூர்யா, ஜீவா, பிரகாஷ், குள்ளா, விக்கி மற்றும் மணி ஆகிய 7 பேர் என்றும் தெரியவந்தது. இந்தக் கும்பலை பிடிக்க தேனாம்பேட்டை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை மேற்கொண்ட விசாரணையில் வாண்டுமணி, அஜித், சூர்யா ஆகிய மூவரும் ஒரே பைக்கில் தஞ்சாவூருக்கு தப்பிச்சென்றதும், இதில் அஜித் மட்டும் திண்டிவனத்தில் இறங்கி தப்பியோடியதும் கண்டுபிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மற்றும் திண்டிவனம் விரைந்த தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த அஜித், சூர்யா, வாண்டுமணி ஆகியோரை பிடித்தனர். பின்னர் தேனாம்பேட்டையில் பதுங்கியிருந்த ஜீவா, பிரகாஷ், குள்ளா, விக்கி, மணி ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், 8 பேரும் கடந்த 29ம் தேதியன்று காலையில் 3 பைக்குகளில் சென்று தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அத்துடன் பரங்கிமலையில் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொள்ளையடித்த கையோடு, கிண்டியைச் சேர்ந்த கூரியர் நிறுவன ஊழியர்கள் விக்ரம், சிலம்பரசன் ஆகியோரை கத்தியைக்காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் செல்போனை தர மறுத்ததால் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு, பைக் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தான் ஆழ்வார்பேட்டை குடியிருப்பில் அறம்மாள் மற்றும் அவரது மகனை வெட்டியுள்ளனர்.

இதையடுத்து 8 பேரிடமும் இருந்து 4 செல்போன்கள், 3 கத்தி மற்றும் பைக்குகளை தேனாம்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் கும்பல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சிலம்பரசன், விக்ரம், அறம்மாள் மற்றும் அருண் ஆகிய 4 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.