விழுப்புரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் எட்டு மாத குழந்தையும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே மனைவி மீது சந்தேகப்பட்டு தான்தான் தீ வைத்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவில் வசித்துவருபவர் சரணவன். மாற்றுத் திறனாளி பட்டதாரி. இவரது மனைவி கனகா. தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை, 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் இரண்டு குழந்தைகள். நேற்று முன்தினம் தனது 5 வயது மகளுடன் சரவணன் ஒரு அறையிலும் மற்றொரு அறையில் 8 மாத ஆண் குழந்தையுடன் கனகாவும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் கனகாவும், 8 மாத குழந்தையும் சிக்கி கொண்டு அலறல் சத்தம் போட்டனர். சரவணனும் செய்வதறியாது சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கனகாவும், அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். சரவணன் லேசான தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா..? திரவ கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா என பல கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் மனைவி மீது சந்தேகப்பட்டு தான் தான் தீ வைத்ததாக சரவணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.