என்.எஸ்.கிருஷ்ணன், பாகவதர்
என்.எஸ்.கிருஷ்ணன், பாகவதர் PT
குற்றம்

பாகவதர், என்.எஸ்.கே என பெரிய புள்ளிகள் சிக்கிய..1944களில் புயலை கிளப்பிய லட்சுமிகாந்தன் கொலை வழக்கு!

Jayashree A

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

இது 1944ல் மிகவும் பிரபலமடைந்த ஒரு வழக்கு. மக்கள் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்களின் கவனத்தை திசை திருப்பிய முக்கியமான வழக்கு இது என்று கூறலாம். பட்டபகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த சாலையில் சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்ற ஒருவரை ஒரு மர்ம கும்பல் மறித்து அவரை படுகொலை செய்தது. 1944 நவம்பர் 8ல் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கானது இன்று வரை குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ஒரு மர்ம வழக்கு.

இதன் வழக்கு தான் என்ன என்பதை பார்க்கலாம்.

1944: சி.என் லட்சுமிகாந்தன் ஒரு பத்திரிக்கையாளராக பணியாற்றிக்கொண்டிருந்த சமயம், திரைப்படம் குறித்தும் அதில் நடிப்பவர்கள் குறித்தும் எழுதி பல்வேறு சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருந்தார். இது மக்களிடையே பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. விரைவில் மக்களின் செல்வாக்கை பெற்ற இவர், தான் தனியாக ஒரு பத்திரிக்கையை ஆரம்பிக்க நினைத்து 1940 இல் சென்னையில் சினிமா தூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். இதிலும் திரைப்பட சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதி பல திரைப்பட முக்கிய புள்ளிகளின் அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டார்.

அந்த நேரத்தில், ஆங்கிலேய அரசு பல பத்திரிக்கையை மூட உத்திரவிட்டது. அதற்கு காரணம் காகித பற்றாக்குறை என்று சொன்னாலும், பல பத்திரிக்கைகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் கட்டுரைகளையும் உண்மைகளையும் போட்டு உடைத்துக்கொண்டிருந்தது. அதில் சினிமாதூது பத்திரிக்கையும் சேர்த்து மூடப்பட்டது. ஆனால் லட்சுமிகாந்தன் தான் எழுதுவதை நிறுத்தவில்லை.

மாறாக, இந்து நேசன் என்ற பத்திரிக்கையை சொந்தமாக வாங்கி அதில் தொடர்ந்து திரைப்படங்கள் பற்றியும் அதில் நடித்த திரைப்பட நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள், சினிமா தயாரிப்பாளர்களின் அந்தரங்க சேட்டைகளையும் பல கலைஞர்கள், நடிகர், நடிகைகளின் நடத்தை பற்றிய செய்திகளை புட்டு புட்டு வைத்து வந்தார். இதனால் சமுதாயத்தில் முக்கியமாக, சினிமா துறையில் மேலும் மேலும் பல எதிரிகளை சம்பாதித்துக்கொண்டார். இவரை தீர்த்துக்கட்ட பலர் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு நாள் புரசைவாக்கம் பகுதியில் லட்சுமிகாந்தன் தனது அலுவலகத்திற்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்ற பொழுது, பட்டப்பகலில் ஒரு கும்பல் இவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டது. குற்றுயிரும் குலையுயிருமாயிருந்த இவரை அங்குள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் அவரிடம் வாக்குமூலமும் வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இவர் இறந்து விட்டார்.

காவல் துறையினருக்கு இது சவால் விடும் வழக்காக அமைந்தது. அதன்படி குற்றவாளிகள் என சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த 8 பேரில் நடிகர் தியாகராஜ பாகவதரும், நடிகர் என்.எஸ். கிருஷ்ணனும் சினிமா தயாரிப்பாளரான ஸ்ரீராமுலுவும் அடக்கம். ஆனால் இவர்கள் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. முக்கிய குற்றவாளிகள் யார் என்று தெரியாத நிலையில், இந்த வழக்கானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. வேறு வழியில்லாமல் நீதிபதி கைது செய்யப்பட்ட 8 பேரும் தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனைக் கொடுத்தது. குற்றவாளிகள் அனைவரும் மேல் முறையீடு செய்தும் எந்த பலனும் இல்லை.

இச்சமயத்தில் 1946ல் கிருஷ்னனும் தியாகராஜ பாகவதரும் தங்களது பணபலத்தின் உதவியால், இவ் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு இவர்களின் வாதம் எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்கு மறு பரிசீலனை செய்யப்பட்டு இவர்கள் குற்றவாளிகள் அல்ல.... என்று தீர்ப்பளித்து நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது.

அதன் பிறகு ... மூன்று வருட சிறைவாசத்தில் தியாகராஜ பாகவதரின் புகழ் சரிந்தது. இவ்வழக்கால் மனது ஒடிந்த இவர் பாடுவதையும் நடிப்பதையும் நிறுத்திவிட்டிருந்தார். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துக்கொண்டிருந்தார். ஆனாலும், இவ்வழக்கானது நிலுவையில் இருந்த நிலையில் இன்று வரை குற்றவாளி யார் என்ற முடிச்சு மட்டும் அவிழவில்லை.

இதே போல் ஆளவந்தார் கொலை வழக்கு மக்களிடையே மிகவும் பேசப்பட்ட வழக்காக இருந்தது. அவ்வழக்கு என்ன என்பதை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்..