திருமயம் அருகே உள்ள கே.புதுபட்டி சரக பாலத்தில் காரை வழிமறித்து 1.82 லட்சம் ரொக்கம் 780 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (27) இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அறந்தாங்கியில் வியாபாரம் செய்தப் பணத்தை காரில் வைத்துக்கொண்டு தனது காரில் காரைக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள கீழநிலைக்கோட்டை பாம்பாறு பாலத்தில் சென்ற போது மர்ம நபர்கள் வழிமறித்து இரும்பு கம்பியால் கார் கண்ணாடியை உடைத்தனர்.
பின்னர் விக்னேஷ் கண்ணை கட்டி விட்டு காரில் இருந்த 780 கிராம் தங்க நகைகள், 1.82-லட்சம் ரொக்கத்தை திருடி விட்டு காரில் தப்பிச் சென்றனர். இதனையெடுத்து விக்னேஷ் அங்கிருந்து தப்பி கே. புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். மர்ம நபர்கள் தாக்கியதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு 3 தையல் போடப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்கள் : மயில்வாகணன் -செய்தியாளர்.