அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு ஜெயங்கொண்டத்தில் சார் பதிவாளராக கோபாலன், எழுத்தராக காமராசன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். அப்போது, உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் நிலத்திற்கு பவர் பத்திரம் எழுதித்தர கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்காக கோபாலன் லஞ்சம் கேட்டதால் பாரதி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்தார்.
அதனையடுத்து, கையும், களவுமாக கோபாலனும், காமராசனும் பிடிபட்டனர். மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் கோபாலனுக்கு 7 ஆண்டுகளும், எழுத்தருக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.