குற்றம்

கவனமின்றி ரிவர்ஸில் வந்த வேன்... பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த 7 வயது சிறுவன்: டிரைவர் கைது

நிவேதா ஜெகராஜா

வளசரவாக்கத்தில் பள்ளி வளாகத்துக்குள்ளேயே பள்ளி வாகனமொன்று கவனத்துடன் இல்லாமல் ரிவர்ஸ் எடுத்து திரும்பியதால், வாகனம் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் என்பவரது மகன் தீக்‌ஷித் (வயது 7). இவர், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இன்று பள்ளி வாகனத்தில் பயணித்த தீக்‌ஷித், பள்ளி சென்று வகுப்பறைக்குள் சென்ற பின்னர் தனது பையை வேனில் வைத்து விட்டதால் அதனை எடுக்க நினைத்து, வேன் நோக்கி மீண்டும் சென்றிருக்கிறார். அப்படி சென்றபோது, பின் நோக்கி வந்த அந்த வேன், எதிர்பாராவிதமாக தீக்‌ஷித் மீது மோதியுள்ளது. இதில் தீக்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனம் (வயது 64), என்பவரை கைது செய்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழப்பையடுத்து, பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களும் நேரில் சென்று தங்களின் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

பள்ளி வளாகத்திலேயே மாணவரொருவர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் ஏன் பின்னோக்கி பார்க்காமல் வாகனத்தை இயக்கினார், அந்த நேரத்தில் பேருந்தில் க்ளீனரோ அல்லது உதவியாளரோ இல்லாதது ஏன் என்பது உள்ளிட்ட பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அப்பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். போலவே, சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அந்த தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.