ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  pt desk
குற்றம்

திருச்சி: நிற்காமல் சென்ற காரை துரத்திப் பிடித்த போலீசார் - மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா!

முசிறி அருகே வெளி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சந்திரன்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குளித்தலை பெரியார் பாலத்தின் அருகில், முசிறி காவல் ஆய்வாளர் செல்லதுரை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நாமக்கல் பகுதியில் இருந்து வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், கார் நிற்காமல் தடுப்புகள் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து ஆய்வாளர் செல்லத்துரை தலைமையில் போலீசார் இணைந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா பறிமுதல்

இதையடுத்து காரை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பல்வேறு புகையிலை போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், பெங்களூரிலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிராட்ஜுவல் (20), உமேஷ் (24), சேலம், ஜானகிராமன் காலனியைச் சேர்ந்த சனந்த்குமார் (26), பாலாஜி (36), லால்குடி சிறுதையூர் மயில்வாகனன் (46), லால்குடி தச்சன்குறிச்சி மணிராஜ் (35), திண்டுக்கல் என்ஜீஓ காலனியைச் சேர்ந்த தங்கமாயன் (55) ஆகிய ஏழு பேரை துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.