குற்றம்

ஆந்திரா: ரூ.3 கோடி மதிப்பிலான முதல்தர செம்மரக்கட்டைகள் கடத்தல் - தமிழர்கள் 7 பேர் கைது

Sinekadhara

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தின் திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவடங்களை சேர்ந்த 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக் கட்டைகள் கடத்தபடுவதாக சித்தூர் மாவட்ட எஸ்.பி. ரிஷாந்த்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சித்தூர் டி.எஸ்.பி. சுதாகர் தலைமையிலான குழு சென்னை-பெங்களூரு சாலையில் உள்ள எம்.சி.ஆர் கிராஸ் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சித்தூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனைசெய்து, செம்மரக் கட்டைகளுடன் வந்த திருப்பத்தூரைச் சேர்ந்த கோவிந்தசாமி சேது மற்றும் ஜோலார்பேட்டையை சேர்ந்த முருகேசன் ஆகியோரை கைதுசெய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பின்னால் மற்றொரு கார் மற்றும் மினி டிரக் ஆகிய 2 வாகனங்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வருவதாக தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து 2 வாகனங்களையும் சோதனை செய்ததில் அவற்றில் முதல்தர செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, திருப்பத்தூரைச் சேர்ந்த பெருமாள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழகாடு கிராமத்தை சேர்ந்த கரியாராமன், கொளஞ்சான், வெங்கடேஷ், கோவிந்தராஜு என மொத்தம் 7 பேரை கைது செய்தனர். 

மேலும் 3 வாகனங்களில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான 2725 கிலோ எடையுள்ள 89 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிப்பாலா காவல் நிலையத்தில் வழக்குப பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.