குற்றம்

ரூ.700 கோடி மோசடி செய்த ட்ராவல்ஸ்! நீதி கேட்டு ஒரே நேரத்தில் 7000 பேர் ஆர்ப்பாட்டம்

webteam

சுமார் 7,000 பேரிடம் 700 கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சியில் போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் ஆம்னி பேருந்து என்ற டிராவல்ஸ் நடத்திவந்தார். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடாக பெற்று, அப்பணத்தை வைத்து அவர் நடத்தும் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் அவர் நடத்திய டிராவல்ஸில் கிடைக்கும் லாபத்தில் முதலீடு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய பங்கை முறையாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்திருக்கிறார். அவருடைய இறப்பிற்கு பிறகு அவரின் சட்ட ரீதியான வாரிசுகள் பங்குதாரர்களின் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களுடைய புகார் மனுக்களை கொடுக்க 6,800 பேர் நேற்று நேரில் சென்றனர். இதனால் அந்த இடமே ஸ்தம்பித்தது.

இதுகுறித்து பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பாளரான ஜபரூல்லா கூறுகையில், `தஞ்சையை சேர்ந்த தொழிலதிபர் கமாலுதினுக்கு மொத்தம் 182 பேருந்துகளும் அதில் 23 நகர் பேருந்துகளும், கிரானைட் குவாரி, பள்ளி, பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டுகள், தங்கும் விடுதிகள் என சுமார் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எங்களிடம் அவர் முதலீடாக பணம் பெற்று ஒவ்வொரு மாதமும் பார்சல் கிடைக்கும் லாபத்தில் சரியாக பங்குகளை பிரித்து கொடுத்துவந்தார். எதிர்பாராத விதமாக கடந்த 19.2.2021 அன்று அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 6,800 பங்குதாரர்களும் 3 மாதத்திற்கு பிறகு அவருடைய உறவினர்களான மனைவி மற்றும் சட்டப்படியான வாரிசுகளிடம் கடந்த 2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தங்களுடைய பங்குத் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவர்களை நேரில் சந்தித்த பேசியும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் பணத்தை திருப்பி தருவதாக தெரியவில்லை. எனவே தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் 6,800 பங்குதாரர்களும் புகார் மனுவை அளித்தோம். வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பணம் திருப்பிதரப்படவில்லை.

எனவே எங்களுடைய வழக்குகளை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததின் அடிப்படையில் வழக்கும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்து செல்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இன்று ஒட்டுமொத்த பங்குதாரர்களான 6,800 பேரும் அமைதியான முறையில் எங்களுடைய கோரிக்கைகளை பதாகைகளாக கைகளில் ஏந்தி கொண்டு அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் எங்களுடைய புகார் மனுக்களை பொருளாதார குற்றப்பிரிவில்  கொடுக்கிறோம்’ என நேற்றைய தினம் (ஆக.25) தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே ஸ்தம்பித்து காணப்பட்டது.