குற்றம்

கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவன் கொலை: புதர்பகுதியில் உடல் மீட்பு

கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவன் கொலை: புதர்பகுதியில் உடல் மீட்பு

Rasus

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது முத்துலாபுரம் கிராமம். இங்கு வசிக்கும் ஜெயக்குமார் - ரேவதி தம்பதியின் ஒரே மகன் 6 வயதான நகுலன். 30-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஜெயக்குமாரின் சகோதரர் போட்டியிட அவருக்கு ஆதரவாக மொத்த குடும்பமும் வாக்குச்சாவடியில் இருந்தது. மற்ற சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த நகுலனை திடீரென காணாததால், குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர்.

ஊர் முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின்பேரில், முத்துலாபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, சிறுவன் நகுலனை கொன்று புதரில் வீசிவிட்டதாக அருள்ராஜ் சொன்ன தகவலை கேட்டு காவல்துறையினர் அதிர்த்தனர்.

சிறுவன் நகுலன் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அருள்ராஜ் ஏற்கெனவே மூதாட்டி ஒருவரை கொலை செய்த வகையில் கைது செய்யப்பட்டவர். 3 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த கொலை வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாலேயே மற்றொரு கொலை செய்ய அருள்ராஜ் துணிந்துவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர் கிராம மக்கள்.

சிறுவன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் மறியலில் ஈடுபட்டனர். அதனால், சில கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அருள்ராஜுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்கிறார்கள் சிறுவனின் உறவினர்கள்.

பிடிபட்ட அருள்ராஜ் அடையாளம் காட்டிய புதர்பகுதியில் இருந்து சிறுவன் நகுலனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சிறுவன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.