former mla
former mla pt desk
குற்றம்

’யாருக்கு முதல்மரியாதை’ - கோவில் திருவிழாவில் நடந்த மோதல்; மதுரையில் அதிமுக, திமுக நிர்வாகிகள் கைது

webteam

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது.

vehicle

இதில் கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேல்முருகன் தரப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் தரப்பினரும் மாறி மாறி தாக்க தொடங்கினர். இதில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தின் வீட்டிற்கு வந்த கும்பல் திடீரென கற்களை வீசி தாக்கி ஜன்னல்கள், டீவி, ப்ரிட்ஜ், பைக், கார்களை அடித்து உடைத்தனர்.

தொடர்ச்சியாக பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்ததோடு, அருகில் இருந்த வீடுகளையும் கற்களால் தாக்கியுள்ளனர். இதில், பொன்னம்பலத்தின் உறவினரான விஜய் என்பவருக்கு, அரிவாள் தாக்குதலில் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. கல்வீச்சில் பழனிக்குமார், வேல்விழி, சுப்பையா ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

police

மேலும், மற்றொரு தரப்பான வேல்முருகன் தரப்பில் திருப்பதி என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பில் திருப்பதி என்பவர் அளித்த புகாரின் கீழ் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்பம்பலம் உட்பட 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேரை சத்திரபட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோன்று இந்த மோதல் தொடர்பாக கருவனூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் என்பவர் அளித்த புகாரின் கீழ் கொலை முயற்சி உள்ளிட்ட 9 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கருவனூரை சேர்ந்த வேல்முருகன் (திமுக கிளை செயலாளர்), திருப்பதி உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

arrest

கோவில் விழாவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோதே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரு தரப்பு மோதல் காரணமாக கிராமத்தில் உள்ள ஆண்கள் ஏராளமானோர் தலைமறைவாகியுள்ள நிலையில், தற்போது கிராமத்தை சுற்றிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.