குற்றம்

வாகன சோதனையில் சிக்கிய ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல எச்சம் - 6 பேர் கைது

Sinekadhara

வேதாரண்யம் அருகே செம்போடையில் வனத்துறையினரின் வாகனச் சோதனையில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மூன்றே முக்கால் கிலோ அம்பர் கிரிஸ் (திமிங்கல எச்சம்) கைப்பற்றப்பட்டதுடன், 4 இரு சக்கர வாகனங்களுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கொடுத்த தகவலின்படி கோடியக்கரை வனத்துறையினர் செம்போடையில் புஷ்பவனம் செல்லும் பாலம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும்படியாக வந்த நான்கு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள மூன்றே முக்கால் கிலோ திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர். இந்த திமிங்கல எச்சம் விலை உயர்ந்த வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அம்பர் கிரிஸை கடத்தி வந்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த ஆண்டவர், சிவலிங்கம் பெரியக்குத்தகையைச் சேர்ந்த மணிவாசகன், நாகையைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், ஒரத்தூரைச் சேர்ந்த இளையராஜா, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சரவணன் ஆகிய ஆறு பேரை கைதுசெய்து நான்கு இரு சக்கர வானங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கோடியக்கரை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.