குற்றம்

கோவை: பதுக்கிவைக்கப்பட்ட 6.5 கிலோ கஞ்சா சாக்லெட்... ரகசிய தகவலால் அலர்ட்டான காவல்துறை!

webteam

கோவை சூலூர் பகுதியில் 6.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர் போலீசார். அவற்றை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த நபரை கைதும் செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதை பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (04.01.2023) சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் சிங் (32) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடமிருந்து 6.5 கிலோ எடையுள்ள 32 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.