குற்றம்

சீனா தொடர்புடைய செயலிகள் மூலம் 5 லட்சம் இந்தியர்களிடம் ரூ.150 கோடி மோசடி: 11 பேர் கைது

Veeramani

சீனாவுடன் தொடர்புடைய மொபைல் ஆப்கள் மூலமாக 5 லட்சம் இந்தியர்களிடம் 150 கோடி ரூபாய் மோசடி செய்த 11 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

சீன தொடர்புடைய மொபைல் ஆப்கள் மூலமாக, லாபகரமான வருமானம் ஈட்டலாம் என்று ஏமாற்றி 5 லட்சம் இந்தியர்களிடம் 150 கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு பட்டய கணக்காளர்கள் உட்பட 11 பேரை  டெல்லி சைபர் போலீஸ் கைது செய்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் மொத்தம் 11 கோடி ரூபாய் பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் கட்டண வழிகளில் தடுக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

POWER BANK மற்றும் EZPlan ஆகிய இரண்டு மொபைல் செயலிகள் லாபகரமான வருமானத்தை அளிக்கின்றன என்ற சமூக ஊடக விளம்பரங்களை காவல்துறை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தது என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். பவர் பேங்க் ஆப் தன்னை பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதன் தலைமையிடம் சீனாவை மையமாகக் கொண்டது, மற்றொரு செயலிக்கும் சீனாவுடன் தொடர்புள்ளது.

இந்த மோசடி மூலமாக பெறப்பட்ட பணத்தை திசை திருப்புவதற்காக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சுமார் 110க்கும் மேற்பட்ட ஷெல் நிறுவனங்களை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டதுஎன்று சைபர் செல் துணை போலீஸ் கமிஷனர்  அனீஷ் ராய் கூறினார்.

மோசடி பணத்தை கைமாற்றிய வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட ஷேக் ராபின் என்பவர் மேற்கு வங்காளத்தின் உலுபீரியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜூன் 2 ம் தேதி, பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, ஷேக் ராபின் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில், டெல்லி-என்.சி.ஆரிலிருந்து இரண்டு பட்டய கணக்கர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.