செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையை நோக்கி அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 500 கிலோ எடையுள்ள குட்கா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணராமன் (27), கானாராமன் (29) என்பதும், இவர்கள் பெங்களூருவில் தங்கி சென்னைக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.