குற்றம்

சென்னை: ஓட்டலில் தங்கி கஞ்சா விற்பனை - 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்

webteam

சென்னையில் தனியார் ஓட்டல் விடுதியில் போதைப்பொருளுடன் தங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கும் விடுதியில் கஞ்சாவுடன் சிலர் தங்கி அதனை சென்னை நகர் முழுவதும் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், தியாகராய நகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அது தொடர்பாக கண்காணித்தனர். இதில் விருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள பிரின்ஸ் பார்க் தங்கும் விடுதியில் அந்த கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை தலைமைக்காவலர்கள் கோவிந்தராஜ், ராஜா, ஸ்ரீநிவாசன் ஆகியோர் அந்த விடுதியில் உள்ள அறையில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அறைக்குள் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து கஞ்சாவை பதுக்கியதாக சென்னை மதுரவாயலைச் சேர்ந்த எழிலரசன், வளசரவாக்கம் பிரித்விராஜ்,, மேற்கு மாம்பலம் ராகுல், பாண்டிச்சேரியைச் சேர்ந்த உபைதுல்லா, கேகே நகர் டேவிட் பிராங்க்ளின் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் எடை மிஷின், ரூ. 6 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விருகம்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.