மைனர் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் சிங் சிர்கா. ராம் சிங் தனது மனைவி பானு குய், மகள் ரம்பா(17) மற்றும் மகன்கள் கண்டே(12), சன்யா(8) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ராம் சிங்கின் சடலம் சிதைந்து போன நிலையில், அவர் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ராம் சிங்கை தொடர்ந்து அவர் குடும்பத்தில் உள்ள மற்ற 4 பேரின் சடலங்களும் மார்ச் 27 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
சடலங்களை கைப்பற்றிய போலீசார் தங்களது விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள வெளியானது. ராம் சிங் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒருவர், அவரது மைனர் மகள் ரம்பாவை திருமணம் செய்து தரக் கோரியுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால், ராம் சிங் பெண் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், பழிவாங்க திட்டமிட்டுள்ளான்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து ராம் சிங் வீட்டிற்கு சென்றுள்ளான். வீட்டில் ராம் சிங் இல்லை. அதனால், ராம் சிங் தவிர்த்து அவர் வீட்டில் உள்ள அனைவரையும் இரும்பு ராடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் அடித்து, வெட்டி கொன்றுள்ளான். அவர்களை முதலில் அருகில் உள்ள காடுகளில் குழி தோண்டி புதைத்துள்ளான். பின்னர், ராம் சிங் வரும் வரை காத்திருந்து, அவர் வந்தவுடன் அவரையும் கொன்று மற்றொரு காட்டில் புதைத்தனர். இந்த உண்மை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மார்ச் 14 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதால், உடல்கள் அனைத்து சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். மைனர் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததற்காக 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.