குற்றம்

உயர்ரக வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் திமிங்கல உமிழ்நீர் - விற்கமுயன்ற 5 பேர் கைது

Sinekadhara

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆம்பர் கிரீஸ் எனப்படும், திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்க முயன்ற ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சுங்கான்கடை பகுதியில், தடை செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், இரணியல் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஐந்து பேரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த ஐந்து கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீரை பறிமுதல் செய்தனர். இந்திராகாலனியைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு, அதனை விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ஐந்து பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள தம்பதியினரை தேடி வருகின்றனர். உயர் ரக வாசனை திரவியம் தயாரிக்கும் மூலப்பொருளாக திமிங்கலத்தின் உமிழ்நீர் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.