மதுரையில் கோயில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பீ.பி.குளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயில் நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில், அவரை வழிமறித்த 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி பையில் வைத்திருந்த 2000 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்ததில், பாலகிருஷ்ணனிடம் கத்தி முனையில் பணம் பறித்தது வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் பார்த்தசாரதி, பீபிகுளம் ராகவேந்திரன், சினேக் நாகராஜ், நரேன் ஆகிய 4 பேர் எனத் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைதுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.