குற்றம்

சொத்து தகராறு: சிறுமிகள் உட்பட 4 பேர் எரித்துக்கொலை!

webteam

சொத்து தகராறு காரணமாக, நான்கு பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கதிகார் மாவட்டத்தில் உள்ள கவுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது தம்பி கேதர் சிங் (45). இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை. இந்நிலையில் நேற்றிரவு கேதர் சிங் தனது மனைவி பிரதிமா தேவி, மகள்கள் டிம்பிள் குமார் (15), சோனி குமாரி (17) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஒரே அறையில் படுத்திருக்க, மற்றொரு அறையில் மகன் லக்‌ஷ்மண் குமார் சிங் (12) படுத்திருந்தார். 

இந்நிலையில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததை அடுத்து லக்‌ஷமண் குமார் வெளியே ஓடிவந்துள்ளார். பிறகுதான் அடுத்த அறையில் படுத்திருந்த அப்பா, அம்மா, சகோதரிகள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர் என்பது தெரிய வந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். இதில் பிரதிமா தேவியும் மகள்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். பலத்த காயமடைந்த கேதர் மருத்துவமனையில் பலியானார். 

அனாதையாகி விட்ட லக்‌ஷ்மண் குமார் போலீசில் கொடுத்த புகாரில், ‘சொத்து தகராறு காரணமாக பெரியப்பா அடிக்கடி எங்களுடன் சண்டை போடுவார். சொத்தை பிரித்து விற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். என் தந்தை மறுத்ததால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். சொன்னபடியே தீ வைத்து எங்கள் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார். தப்பியோடிவிட்ட மனோஜை போலீசார் தேடிவருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக நான்கு பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.