பழனி அருகே வீட்டில் இருந்த 4மாத கைக்குழந்தை மர்மமான முறையில் ஆற்றில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ராஜாபுரம் ஊராட்சியில் 2வது வார்டில் வசித்து வரும் மகேஷ்வரன்-லதா தம்பதிக்கு 3வயதில் ஆண்குழந்தையும், பிறந்து 4மாதமே ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், இன்று மகேஷ்வரன் வேலைக்கு சென்ற நேரத்தில், குழந்தைகளுடன் வீட்டில் இருந்த தாய் லதா, தனது 4மாத கைக்குழந்தை கோகுலை வீட்டில் படுக்கவைத்து விட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் லதா அக்கம்பக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியுள்ளனர்.
அப்போது அருகில் உள்ள பாலாறு பொருந்தலாறு ஆற்றின் கரையில் அமலைச்செடிகளுக்கு நடுவே குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துவந்தனர். மருத்துவர்களும் சோதனை செய்து குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை கடத்தி ஆற்றில் வீசப்பட்டு கொலை செய்தது யார் என்றும்? எதற்காக குழந்தையை கொலை செய்தனர் என்றும் பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த குழந்தை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.