சென்னையில் சந்தேகத்துக்குரிய வகையில் மரணமடைந்த விசாரணைக் கைதி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தது தொடர்பாக, காவல்துறையினர் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதால், வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷின் உடலில் கடுமையான காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலை, இடது கண், இடது கை, இடது தோள், வலது முதுகு, இடுப்பில் சிராய்ப்பு என விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், ரத்தக் கட்டுகள் இருந்தாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர விக்னேஷின் முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும், ஒரே ஒரு எக்ஸ் ரே மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. உடலின் ஒரு இடத்தில் எலும்புமுறிவு கண்டறியப்பட்டாலும், அது 'கொடுங்காயம்' என்றே குறிப்பிடப்படும் என்பதால், விக்னேஷ் கொடுங்காயத்துக்கு உள்ளாகி இருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெளிவாகிறது.
விக்னேஷ் மரணம் குறித்து தேசிய பட்டியலினத்தோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்டெர் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்னேஷ் மரண வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சேர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தமிழகத்தில் சமீப காலங்கள் நிகழ்ந்த காவல் மரணங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் காவல்துறையினர் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பான விசாரணையே இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. அதில், சிலவற்றை பார்க்கலாம்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரும் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக சென்ற மணிகண்டன், வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து, மணிகண்டனை துரத்தி சென்று பிடித்த காவல்துறையினர், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய பிறகு விடுவிக்கப்பட்டார்.
ஆனால், வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை அருகே சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கைது செய்யப்பட்ட தங்கமணி, கடந்த 27 ஆம் தேதி மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணையின் போது காவல்துறையினர் கடுமையாக தாக்கியதே தங்கமணி உயிரிழப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 18-ம் தேதி சென்னை தலைமைச் செயலக காலனியில் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வைத்திருப்பதாக விக்னேஷ், சுரேஷ் இருவர் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விக்னேஷ் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த விக்னேஷின் உடலில் தலை, புருவம், தாடை உள்ளிட்ட 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 348 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.