குற்றம்

300 கிலோ கஞ்சா கடத்தல் - மடக்கிப் பிடித்த நாமக்கல் போலீஸார்

webteam

நாமக்கல்லில் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேலுசாமி மற்றும் போலீசார், சேலம் சாலை முருகன் கோயில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். லாரியை ஆய்வு செய்ததில் சுமார் 20 கிலோ எடை கொண்ட 15 மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுனரை கைது செய்த போலீஸார், 300 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடத்திச் சென்ற கஞ்சாவின் மதிப்பு 30 லட்சம் என்பது தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்தவர்கள் பெத்தநாய்க்கன் பாளையம், ஏரிவலவை சேர்ந்த பழனி (55) மற்றும் ராஜ்குமார் (34) என்பது தெரிய வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் ரூ 41 லட்சம் மதிப்புள்ள சுமார் 410 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவலர்கள் 13 பேரை கைது செய்துள்ளனர்.