crime PT - News
குற்றம்

காதலிக்க மறுத்த பெண்ணை 30 ஆண்டுகளாக துன்புறுத்தியவர் கைது!

கடந்த 30 வருடங்களுக்கு முன் கிறிஸ்டபர் தனது இளமைக் காலத்தில் ஸ்டெல்லா பாயைக் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதை ஸ்டெல்லாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்ய்டெல்லா பாய் இவரது காதலை ஏற்காமல், வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சண்முகப் பிரியா . செ

செய்தியாளார்: சுமன்

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு பகுதியில் திருமணத்திற்கு மறுத்த காதலியை 30-வருடத்திற்கு பிறகு தீர்த்து கட்ட முயன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். 57-வயதிலும் தீராத கோபம் படுக்கையில் கிடந்த காதலியை 15-இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பியோடியவரை தக்கலை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு அருகே உள்ள தாறாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர். 57-வயதான இவர் கட்டிட தொழிலளியாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி அதே பகுதியில் உள்ள ஸ்டெல்லாபாய் என்பவரது வீட்டிற்குச் சென்ற கிறிஸ்டோபர் அங்கு படுக்கையில் உணவறுந்திக்கொண்டிருந்த ஸ்டெல்லா பாயை அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளார்.

murder

அப்போது ஸ்டெல்லா பாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் வீட்டிற்குள் வருவதற்குள் ஸ்டெல்லாபாயை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்டெல்லா பாயை கணவர் கோபால கிருஷ்ணன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஸ்டெல்லா பாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிட்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையில் கிடந்த ஸ்டெல்லா பாயை எதற்காக கொலை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு 30 ஆண்டுகளாக பகை விடையாகக் கிடைத்துள்ளது.

ஆம் கடந்த 30 வருடங்களுக்கு முன் கிறிஸ்டபர் தனது இளமைக் காலத்தில் ஸ்டெல்லா பாயைக் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஸ்டெல்லாபாயிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஸ்ய்டெல்லா பாய் இவரது காதலை நிராகரித்துவிட்டு வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிறிஸ்டோபரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திருமணம் ஆன ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளார். இதனால் ஸ்டெல்லா பாயை அடிக்கடி அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த ஜாண் கிறிஸ்டோபர் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்துள்ளார்.

தொடர்ந்து பத்து வருடம் தனிமையில் வாழ்ந்து வந்த ஸ்டெல்லா பாய் ஜாண் கிறிஸ்டோபரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் கடந்த 2013-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜாண் கிறிஸ்டோபர் 2015 ஆம் ஆண்டு மீன் சந்தைக்கு சென்ற ஸ்டெல்லா பாயை வழி மறித்து தடுத்து நிறுத்தி வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஸ்டெல்லா பாய்க்கு தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குறித்த வழக்கு நாகர்கோவில் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

10-வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த மாதம் ஸ்டெல்லா பாயிடம் சாட்சி விசாரணை நடைபெற இருந்த நிலையில் ஸ்டெல்லா பாய் தொடர்ந்த வழக்கால் தண்டனை பெற்று தான் சிறைக்கு செல்ல நேருமோ என்ற அச்சத்தில் அரிவாளுடன் ஸ்டெல்லா பாய் வீட்டிற்கு சென்று படுக்கையில் உணவருந்திக் கொண்டிருந்த ஸ்டெல்லா பாயை சரமாரியாக வெட்டியுள்ளார்.

கோபால கிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜாண் கிறிஸ்டோபர் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட 6-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜாண் கிறிஸ்டோபரை கைது செய்த தக்கலை போலீஸார் அந்த நபரை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

காதலிக்க மறுத்த பெண்ணை 30 ஆண்டுகளாக தொல்லை செய்து வந்தது மட்டுமல்லாமல் இரு முறை கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.