குற்றம்

புதுதில்லி: 62 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 30 வயது நபர் கைது

Sinekadhara

புதுதில்லியில் 62 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கழுத்தை அறுத்து கொலைசெய்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் புதுதில்லியிலுள்ள புது அஷோக் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அரங்கேறியுள்ளது. கிழக்கு தில்லியின் தல்லுபுரா கிராமத்தில் 62 வயது பெண்மணி ஒருவர் பாதுகாவலராக பணிபுரியும் தனது இளையமகனுடன் வசித்துவந்தார். காய்கறிக்கடை வைத்து நடத்திவரும் அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது பேரனை கடையைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்பிறகு அந்த பெண் திரும்பி வரவில்லை.

வேலைக்குச் சென்றிருந்த மகன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு தனது தாயார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் உடலில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய காயங்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பிணத்தின் அருகே தாக்கப்பட்ட அரிவாளையும் கைப்பற்றினர். மேலும் பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்ததுடன், உடலில் கிட்டத்தட்ட 25 குத்துக்காயங்களும் இருந்தது சோதனையில் தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்தபோது விபின் தேதா என்ற 30 வயது பக்கத்து வீட்டு நபர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்றுவிட்டு 20 நிமிடங்கள் கழித்து வெளியேவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை பிடித்து விசாரித்தபோது நீண்டநேரம் கழித்து உண்மை வெளிவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நன்கு மது அருந்தியிருந்த விபின், அந்த 62 வயது பெண் வீட்டிற்குள் செல்வதைப் பார்த்து தானும் சென்றிருக்கிறார். அங்கு அந்த பெண்ணை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்துவிடும் என்ற பயத்தில் அங்கிருந்த அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மேலும் வயிற்றில் பலமுறை குத்தியிருக்கிறார். விபினின் மனைவி அவரைவிட்டு பிரிந்துசென்றதால் அவர் தனது வீட்டில் தனியாக வசித்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபின்மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய குற்றங்களுக்கு வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்த போலீஸார் மேற்கொண்டு விசாரணையை நடத்திவருகின்றனர்.