குற்றம்

‘பயப்படாத கல்யாணம் பண்ணிக்குறேன்’ - இளம்பெண்ணை நண்பர்களுடன் சீரழித்த கொடூரன்!

‘பயப்படாத கல்யாணம் பண்ணிக்குறேன்’ - இளம்பெண்ணை நண்பர்களுடன் சீரழித்த கொடூரன்!

webteam

சேலத்தில் இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்த பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

தருமபுரியை சேர்ந்தவர்  கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கணவரால் கைவிடப்பட்டவர். இவரது தந்தை இறந்துவிட்டார். தாயார் வாய் பேசமுடியாதவர். இவ்வாறு கவிதாவின் வாழ்க்கையே சோகத்தில் தான் நகர்ந்து வந்தது. தனது தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை அழைத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் வந்தார் கவிதா. அங்கு தாத்தாவை சிகிச்சைக்காக சேர்த்து, உடன் இருந்து பார்த்துக்கொண்டார். அப்போது கவிதாவின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுள்ளார் நையிம் மாலிக் என்ற இளைஞர். கவிதாவிடம் ஆறுதலாக பேசி நண்பர் போல் அறிமுகம் ஆகியுள்ளார். 

ஒரு முறை கவிதா இல்லாத போது அவரது போனிலிருந்து, தனது போனுக்கு தொடர்பு கொண்டு போன் நம்பரை பதிந்துகொண்டார். பின்னர் அடிக்கடி கவிதாவிற்கு போன் செய்து பேச ஆரம்பித்துள்ளார். அடிக்கடி பேசி கவிதா கணவரால் கைவிடப்பட்டவர் என்பதை தெரிந்துகொண்டார். அவரது குடும்பநிலையை உணர்ந்து கொண்ட பின்னர், ஆறுதலாகப் பேசி வந்துள்ளார். ‘நீங்கள் கணவரால் கைவிடப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. பயப்படாத நான் கல்யாணம் பண்ணிக்குறேன்’ என ஆசை வார்த்தைகளை கூறிவந்துள்ளார். ஆறுதலான பேச்சால் ஏமாற்றம் அடைந்து கவிதா பேச்சை தொடர்ந்துள்ளார். இதற்கிடையே சிகிச்சை முடிந்து தருமபுரி சென்றுவிட்டார் கவிதா.

ஆனால் கவிதா மீது நையிம் மாலிக் உண்மையான காதல் கொள்ளவில்லை. அந்தக் கொடூரன் பாலியல் ஆசையுடன் மட்டுமே அந்தப் பெண்ணுடன் பேசி வந்துள்ளான். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவிதாவை சேலத்திற்கு வருமாறு நையிம் மாலிக் அழைத்துள்ளான். ஆனால் கவிதா வர மறுத்துள்ளார். ஒரே ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளான் நையிம் மாலிக். ‘உடனே திரும்பி விடுவேன்’ என்று நிபந்தனை விதித்து வந்துள்ளார் கவிதா. நேரில் வந்த அவரை அழைத்துக்கொண்டு பூங்கா, சுற்றுலாத்தளம் என சுற்றியுள்ளான் நையிம் மாலிக். இப்படியே இருட்டும் வரை கவிதாவை அங்கும் இங்குமா பொய்களைக் கூறி அழைத்துக்கொண்டு சுற்றியுள்ளான். பின்னர் இருட்டிய பிறகு வீடு செல்ல வேண்டாம், இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு தெரிவித்துள்ளான். 

தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து கவிதாவை தங்க வைத்துள்ளான். சிறிது நேரத்திற்குப் பிறகு தனது நண்பர்கள் நஃபீஸ் மற்றும் ரஞ்சித்  ஆகிய இருவரையும் அறைக்கு அழைத்து வந்துள்ளான். அவர்களின் ஆசைக்கு இணங்குமாறு கவிதாவை வற்புறுத்தியுள்ளான். அதிர்ச்சியடைந்த அப்பெண் கோபத்துடன் எதிர்ப்பு தெரிவிக்க, மூன்று பேரும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் மதுவில் மயக்க மருந்து கலந்து கவிதாவுக்கு கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியுள்ளனர். அவர் மயங்கிய பின்னர் மூன்று கொடூரர்களும் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அடுத்த நாள் கவிதா காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விரைந்து சென்று 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.