சென்னையில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கோயில் பூசாரியை பொதுமக்கள் அடித்து, உதைத்தனர்.
சென்னை, சூளைமேடு பகுதியில் ராமலிங்கம், குமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் என்றால் இவர்களை காண, 3 வயது சுட்டிப் பேத்தி ஆசையாய் வந்துவிடுவார். அவ்வாறு வரும் பேத்தியை, பாட்டி கடைக்கு அழைத்துச் செல்வது, வேண்டியதை வாங்கித் தருவது, கோயிலுக்கு அழைத்துச்செல்வது என அன்புடன் கவனித்துக்கொள்வார்.
இவர்களது வீட்டின் அருகில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் என்ற கோவில் உள்ளது. இங்கு துணைப் பூசாரியாக உதயக்குமார் என்பவர் பணிபுரிகிறார். பாட்டி தனது 3 வயது பேத்தியை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தையை கோவிலுக்குள் சென்று விளையாடியுள்ளது. குழந்தையிடம் பூசாரி உதயக்குமார் அன்பாக பேசியுள்ளார். பாட்டி அருகில் செல்வதற்காக கிளம்ப, குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக உதயக்குமார் கூறியுள்ளார். கோவிலுக்கு யாரும் வராத நேரத்தில் உதயக்குமாரின் கொடூர குணம் வெளி வந்துள்ளது. குழந்தைக்கு அந்தக் கொடூரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். குழந்தை கதறி அழுதுள்ளது.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தையை விடுவித்துள்ளான். குழந்தை வீட்டிற்கு ஓடிச்சென்று, நடந்ததை என்னவென்று கூட கூறத்தெரியாமல், அழுதுக்கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. குழந்தையை பரிசோதித்து பார்த்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதை அவர்கள் உறுதிசெய்துள்ளனர். ஆத்திரடமடைந்த பெற்றோர் பொதுமக்களுடன் சேர்ந்து கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த உதயக்குமார் பேச்சை மாற்றி பொய் கூற முயன்றுள்ளார். இதில் மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர் அவரை தாக்க, பொதுமக்களும் உடன் சேர்ந்து பூசாரியை அடி வெளுத்துள்ளனர். பின்னர் மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவிக்க, காவலர்கள் வந்து உதயக்குமாரை கைது செய்தனர்.