குற்றம்

குழந்தையை விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தாய் உட்பட 3 பேர் கைது

குழந்தையை விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தாய் உட்பட 3 பேர் கைது

webteam

கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு குழந்தை காணாமல் போனதாக போலீசாரிடம் நாடகமாடிய தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் - தனலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், தனலட்சுமி, கடந்த 12ஆம் தேதி தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய சுகாதார வளாகம் அருகே குழந்தையை வைத்து விட்டு கழிவறைக்கு சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து குழந்தையின் தாய் தனலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது தனலட்சுமி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தனலட்சுமி குழந்தையை கொண்டு வருவதும் அப்பொழுது ஒரு பெண்மணி தனலட்சுமி இடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்டு செல்வதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து தனலட்சுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த உதயா (37), சுமதி (32) தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளை கடந்தும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சுமதி தனது முகநூல் பக்கத்தில் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனவும் தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த தனலட்சுமி, தனது குழந்தையின் புகைப்படத்தை உதயா சுமதி தம்பதியினருக்கு அனுப்பி குழந்தையை விற்பதாக அவர்களிடம் பேசியுள்ளார். பின்னர் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு கொடுப்பதாக பேரம் பேசியுள்ளார்.

இதனை அடுத்து கடந்த 12ஆம் தேதி சுமதியை கிருஷ்ணகிரி வரவழைத்த தனலட்சுமி, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தை ஒப்படைத்துவிட்டு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் தனலட்சுமி தனது குழந்தை பற்றி நலம் விசாரிக்க சுமதியை தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போனில் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. பின்னர் தனது குழந்தையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக போலீசாரிடம் உண்மையை தெரிவிக்க பயந்து தனலட்சுமி தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாய் தனலட்சுமி குழந்தையை வாங்கிய சுமதி, உதயா ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் கிருஷ்ணகிரி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.