குற்றம்

போலி ஆதார் அட்டைகள் தயாரிப்பு: 3 பேர் கைது

போலி ஆதார் அட்டைகள் தயாரிப்பு: 3 பேர் கைது

webteam

சென்னையில் போலி ஆதார் அட்டைகளை தயாரித்து வெளிமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில், தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மூலம் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்‌த தனியார் நிறுவனத்தை சேர்ந்த அருண், பாலமுருகன் ஆகியோர் ஆதார் அச்சிடும் கருவிகளை, பணி முடிந்ததும் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், வங்கிக்குத் தெரியாமல் கருவிகளை வெளியே எடுத்து வந்து வெளிமாநிலத்தவர்களுக்கு போலியான முகவரியில் ஆதார் அட்டைகளை வழங்கி வந்துள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த நிம் பகதூர் கற்றி என்பவரின் மூலமாக, வெளிமாநிலத்தைச்சேர்ந்தவர்களிடம் ஒரு ‌ஆதார் அட்டைக்கு 1500 முதல் 1800 வரை வசூலித்திருக்கிறார்கள். அந்த வகையில் 80க்கும் அதிகமானோருக்கு போலியான ஆவணங்களின் அடிப்படையில் ஆதார் அட்டைகளை தயாரித்து அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவான்மியூர் கடற்கரை அருகே அருண், பாலமுருகன் மற்றும் இவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட நேபாளத்தை சேர்ந்த நிம் பகதூர் கற்றி ஆகியோருக்கு இடையே கமிஷன் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவான்மியூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் மூவரையும் பிடித்து விசாரித்தபோது போலி ‌ஆவணங்களின் அடிப்படையில் ஆதார் கார்டுகளை தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து லேப்டாப், கைரேகை பதிவிடும் கருவி, ஐ ஸ்கேனர், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் நம்பிக்கை துரோகம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மூ‌லம் எத்தனைப்பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை ‌அறியும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.