arrested people
arrested people pt
குற்றம்

சென்னையில் ரூம்போட்டு வாடகை வண்டியில் செயின் பறிக்கும் வடமாநில இளைஞர் கும்பல்; சுத்துப்போட்ட போலீஸ்!

யுவபுருஷ்

சென்னை ஓட்டேரி பட்டாளம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுரேஷ் பாபு - சுபாஷினி (38) தம்பதி. இதில் சுபாஹினி, கடந்த 7ம் தேதி காலை 9 மணி அளவில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் மேம்பாலம் அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர், சுபாஷினி கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

தொடர்ந்து, இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சுபாஷினி பெரம்பூரில் இருந்து வரும்போது குறிப்பிட்ட ஒரு பிரியாணி கடையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி அங்கு பிரியாணி வாங்கி உள்ளார். அவரைப்பின் தொடர்ந்து வந்த திருடர்கள், அவர் கடையிலிருந்து வெளியே வரும் வரை காத்திருந்து பின்தொடர்ந்து சென்று வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், மீண்டும் 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து 2.5 சவரன் தாலி செயின் பறித்துள்ளனர். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் மூன்று வட மாநில நபர்கள் பெரியமேடு பகுதியில் அறை எடுத்து தங்கி இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், குற்றவாளிகளை கண்டறிந்து, ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே அவர்களை பிடிக்க முற்பட்டபோது, மூன்று பேரும் கீழே விழுந்ததில் அவர்களுக்கு கை உடைந்தது.

இதனையடுத்து ஓட்டேரி போலீசார் மூன்று பேரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டு, அதன் பிறகு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சச்சின் குமார்( 24), அங்கீத்( 20 ), அங்கித் யாதவ் (26) என்பது தெரிய வந்தது. இதில் சச்சின் குமார் மற்றும் அங்கீத் ஆகிய இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கீத் யாதவ் அவர்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.

இவர்கள் மூவரும் ஹரியானா மாநிலத்தில் இருந்து சமீபத்தில் சென்னைக்கு வந்து அறை எடுத்து தங்கி வாடகை மூலம் இருசக்கர வாகனங்களை எடுத்து, அதை பயன்படுத்தி இருவேறு செயின் பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் செயின் பறிப்பு முடிந்த பின்பு ஹரியானா செல்வதற்கு இவர்கள் தயாராக இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.