குற்றம்

காவலரே துணைபோன அதிர்ச்சி! - அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

காவலரே துணைபோன அதிர்ச்சி! - அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

Sinekadhara

அதிர்ஷ்டமான வைரக்கல் வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்சம் மோசடி செய்த ஒரு காவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியை வலைவீசி தேடிவருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளிப்பட்டிணத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம், சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட அதிர்ஷ்டமான வைரக்கல் தங்களிடம் உள்ளதாகவும், அதன் மதிப்பு 5 லட்சம் எனவும் ஆசை வார்த்தைகளைக் கூறிய தூத்துக்குடி மாவட்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி, உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியைச் சேர்ந்த புதுராஜா, நக்கலப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் மற்றும் உசிலம்பட்டி நகர் காவல்நிலைய காவலர் சிவனாண்டி உள்ளிட்ட நான்கு பேர் சண்முகத்திடமிருந்து 5 லட்ச ரூபாயை பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தன்னிடமிருந்து ரூ.5 லட்சத்தை 4 பேர் மோசடி செய்து பறித்துச் சென்றுவிட்டதாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி நகர் காவல்நிலைய போலீசார், குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் குணபாலன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு, மோசடி செய்து 5 லட்ச ரூபாயை அபகரித்துச் சென்ற புதுராஜா, சார்லஸ் மற்றும் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய காவலர் சிவனாண்டி உள்ளிட்ட மூவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய சங்கிலி பாண்டியை தேடிவரும் போலீசார் இந்த சம்பவத்தில் காவலர் சிவணாண்டியுடன் துணைக்குச் சென்றதாக மற்றுமொரு காவலர் சரவணன்மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.