குற்றம்

நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் - ஆசிரியை இடம் பணம் பறித்த மூவர் கைது

Sinekadhara

தஞ்சையில் முறைகேடான தொடர்பை வீடியோவாக எடுத்து அதைக்காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே வல்லம் மின்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் முபாரக் (25). இவரது தந்தை புருணை நாட்டில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அங்கு கோயம்புத்தூர், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தன் என்பவரின் மனைவி சாந்தா (42) பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புருணையில் இருந்தபோது முபாரக்கிற்கும் சாந்தாவிற்கும் திருமணத்தை மீிறிய உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக முபாரக் எடுத்துள்ளார்.

பின்னர் வீடியோவைக் காட்டி சாந்தாவை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் முபாரக். வல்லம் தேவாரம் நகர் ரவிச்சந்திரன் மகன் தினேஷ் (30), மின்நகர் அன்பு மகன் தினேஷ் (26) ஆகியோர் வங்கிக்கணக்கில் பணம் போடச் சொல்லி மிரட்டியுள்ளார். அந்த வகையில் நவம்பர் மாதம் வரை ரூ.40 ஆயிரத்தை சாந்தா முபாரக் நண்பர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி உள்ளார்.

இருப்பினும் முபாரக் தொடர்ந்து சாந்தாவை மிரட்டி வந்துள்ளார். நெருக்கமாக உள்ள வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன். சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சாந்தா. இதையடுத்து சாந்தா வல்லம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பு மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக், தினேஷ், மற்றொரு தினேஷ் என மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.