குற்றம்

எட்டு கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்

எட்டு கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்

webteam

ஹாங்காங்கில் இருந்து கடத்திவரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹாங்காங்கிலிருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தங்கம் கடத்திவரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அப்போது அதிகாரிகளின் கேள்விகளுக்கு அந்தப் பெண்கள் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்து, பெண் அதிகாரி ஒருவர் இரண்டு பெண்களிடமும் சோதனை நடத்தியுள்ளார். அப்போது உடைக்குள் மற்றொரு உடை அணிந்திருந்த அவர்கள் அதற்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தலா 12 வீதம் இருவரிடமிருந்தும் மொத்தம் 24 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் விலை மொத்தம் 8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தென் கொரியாவைச் சேர்ந்த ஹன்பியோல் ஜங் மற்றும் என்யங் கிம் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.