சிவில் சர்வீசஸ் தேர்வில் 93-வது இடத்தைப் பிடித்தவரும், 2016-ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்று பிரபலமானவருமான ஐஸ்வர்யா ஷியோரன் மும்பை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 2016 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்று பிரபலமான ஐஸ்வர்யா ஷியோரன் சிவில் சர்வீசஸ் தேர்வில் 93 இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அவர் தற்போது மும்பை கல்பா காவல்நிலையில், தனது பெயரில் உலா வரும் போலியான இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அண்மையில் ஐஸ்வர்யா ஒரு தனியார் நாளிதழுக்குப் பேட்டி அளித்தார். அவரை பேட்டி எடுத்த பத்திரிகையாளர் உங்களது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கணக்குகள் உள்ளன. இதில் உங்களது உண்மையான கணக்கு எது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஸ்வர்யா தனக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்தவித கணக்குகளும் இல்லை என பதிலளித்தார்.
இந்தப் பேட்டியின் மூலம் தனது பெயரில் உலா வரும் போலியான இன்ஸாடாகிராம் கணக்குகளை பற்றி அறிந்து கொண்ட ஐஸ்வர்யா தனது சகோதரரை இது குறித்து பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது ஐஸ்வர்யா பெயரில் 20 இன்ஸ்டாகிராம் கணக்குகள் இருந்ததும், அதில் ஒரு கணக்கை 27,000 நபர்கள் பின்தொடர்வதும் தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து கடந்த வியாழகிழமை மும்பை கல்பா காவல்நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் போலி கணக்குகளை உருவாக்கியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது “ இது தற்போது வேண்டுமானல் எந்த வித பிரச்னையையும் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் பிரச்னையைக் கொடுக்கும்” என்றார்.
அவரது சகோதரர் கூறும் போது “ எனது சகோதரி பெயரைப் பயன்படுத்தி அவரின் அனுமதியில்லாமல் இன்ஸாடாகிராமில் அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 20 போலி கணக்குகள் இருப்பதைக் கண்டோம். ஆகையால் இது குறித்து நாங்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.