குற்றம்

காஞ்சிபுரம்: வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

Sinekadhara

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை சிலர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகாரின் பெயரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குநர் ஆபாஷ்குமார் உத்தரவின் பெயரில் போலீசார் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கை மேற்கொண்டனர். 

இதில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற சுமார் 2,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த அரிசி கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாரதிதாசன், பார்த்திபன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இதுபோன்ற ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.