குற்றம்

500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 18 செல்போன்களை பறிகொடுத்த திருடர்கள் சிறையிலடைப்பு!

webteam
காய்கறி வியாபாரியிடம் வழிமறித்து பணம் பறித்த இரண்டு நபர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 
ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவர் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். நேற்று மாலை திருமுல்லைவாயிலில் 'ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன்' அருகில் சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த இரண்டு மர்ம நபர்கள், இவரை வழிமறித்து 500 ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து, அவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடினர். அதில், அம்பத்தூர், கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்கின்ற அஜித்குமார் (26) மற்றும் சந்தோஷ் குமார் (19) இருவரும் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் பாரிமுனை கொத்தவால் சாவடி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன் பெயரில் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 18 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், திருவேற்காடு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.