குற்றம்

சென்னை: லோன் வாங்கி தருவதாகக் கூறி போலி கால்சென்டர் நடத்தி பண மோசடி - 2 பேர் கைது

சென்னை: லோன் வாங்கி தருவதாகக் கூறி போலி கால்சென்டர் நடத்தி பண மோசடி - 2 பேர் கைது

Sinekadhara

லோன் வாங்கி தருவதாகக் கூறி போலி கால்சென்டர் நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 2 நபர்கள் அடையார் சைபர்கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் 4 செல்போன்கள் மற்றும் 4,800 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, வேளச்சேரி, செல்லியம்மன் நகரில் வசித்து வருபவர் புருசோத்தமன்(22). இவரை செல்போனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் வங்கியில் இருந்து லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய புருசோத்தமன் தனது ஆவணங்களை கொடுத்துள்ளார். மேலும் கடந்த 4ஆம் தேதியன்று புருசோத்தமனிடம் செல்போனில் தொடர்புகொண்டு GST மற்றும் CIBIL Score பார்க்க வேண்டும் என்று சிறுக சிறுக பணம் ரூபாய் 10,000 வரை வாங்கியுள்ளனர்.

மேலும் தொடர்ந்து பணம் கேட்கவே சந்தேகமடைந்த புருசோத்தமன் இது குறித்து அடையார் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

அடையார் சைபர் கிரைம் போலீசார் அழைப்புவந்த செல்போன் IMEI எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த எண்ணில்  திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, சி.சி.எச் ரோட்டில் HP Global Services Banking & Non Banking என்ற பெயரில் இயங்கிவந்த போலி கால்சென்டரை கண்டறிந்து, விசாரணை செய்தபோது புகார்தாரரிடம் பணம்பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

அதன்பேரில் கால்சென்டர் நடத்திவந்த நங்கநல்லூரை சேர்ந்த சண்முகபிரியா(24) மற்றும் செவ்வாப்பேட்டையை சேர்ந்த பிரேம்நாத்(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள் மற்றும் 4,800 ரூபாய் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில், சண்முகபிரியா மற்றும் பிரேம்நாத் இரண்டுபேரும் ஏற்கனவே ஒரே கால் சென்டரில் வேலை செய்து வந்ததும், அதன் அடிப்படையில் Just dial போன்ற பல்வேறு இணையதளங்கள் மூலம் லோன் கேட்டு விண்ணப்பித்தவர்களின் செல்போன் எண்களை சேகரித்து, ஆசை வார்த்தைகள் கூறி, பணம் பெற்று ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.