தருமபுரி மாவட்டம் திம்மராயனஹள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் போலிசான்றிதழ் கொடுத்து 19 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
தருமபுரி மாவட்டம் வெங்கட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவர் காரிமங்கலம் ஒன்றியம் மலை கிராமமான திம்மராயனஹள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2001 ஆண்டு தொடக்க பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்து, 2017 ஆண்டு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார் இவர். தற்போது பள்ளி கல்வி இயக்குனரகத்தின் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திம்மராயனஹள்ளி தொடக்க பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வரும் கண்ணாம்மாளின் 10 மற்றும் 12 வகுப்பு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதில் 12 ஆம் வகுப்பில் தனிதேர்வராக தேர்வு எழுதியுள்ளார். அதில் 4 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். அதாவது தேர்வுக்கு வருகை புாியாமல் தேர்ச்சி பெற்றதாக போலியான சான்றிதழ் கொடுத்தது சான்றிதழ் சரிபார்ப்பில் தெரியவந்தது. இதனையடுத்து தேர்வுத்துறையிலிருந்து தலைமையாசிரியை கண்ணம்மாளின் சான்றிதழ் போலியானது, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவிற்கு அறிவுறுத்தியது.
தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், பாலகோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், திம்மராயணஹள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வரும் கண்ணம்மாள் மீது நடவடிக்கை எடுக்க, காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் உமாதேவி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில், குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட கண்ணம்மா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கால்துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல் துறை விசாரணை முடிவில், தலைமையாசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்தார்.