அமிர்தசரஸ் கள்ளச்சாராய மரணம் கோப்பு படம்
குற்றம்

கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி.. அமிர்தசரஸில் நடந்த சோகம்!

அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் அருந்திய 17 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Rishan Vengai

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் குறைந்தபட்சமாக 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மஜிதா தொகுதியின் கீழ் உள்ள பங்கலி கலான், தரிவால், சங்கா மற்றும் மராரி கலான் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலக்குறைவால் அமிர்தசரஸ் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தார்.முதல் கட்ட விசாரணையில் கள்ளச்சாராயம் ஒரே இடத்தில் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து இரண்டு எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது பஞ்சாப் காவல்துறை. மேலும் முக்கிய சப்ளையர்களான பிரப்ஜித் சிங் மற்றும் சாஹிப் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர மேலும் ஆறு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் பிற மாநிலங்களிலும் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குருதாஸ்பூர் மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் சுமார் 130 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 12 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால் பார்வை இழந்தனர். டார்ன் தரன் மாவட்டத்தில் மட்டும் 80 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி 17 பேர் இறந்ததை அடுத்து, முதலமைச்சர் பகவந்த் மான் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10 லட்சம் இழப்பீடு அறிவித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இரண்டு கலால் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்திய குறைந்தது 67 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.