குற்றம்

பப்ஜி மதன் மீது 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சைபர் கிரைம் காவல்துறை

பப்ஜி மதன் மீது 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சைபர் கிரைம் காவல்துறை

Sinekadhara

யூ டியூபர் பப்ஜி மதன் மீது 1,600 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

யூடியூப்பில் ஆபாசமாக பேசிய படியே பப்ஜி விளையாடி வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். ஜூலை மாதம் குண்டர் சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீது 1,600 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் 32 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 150 புகார்களில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை மதனின் வங்கிக்கணக்கில் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. கொரோனா நிவாரண உதவி செய்வதாகக் கூறி 2,842 பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்திருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களை ஆபாசமாக சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்தல் என 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பண மோசடி குறித்து மேலும் ஒரு வழக்குப்பிரிவு முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச வீடியோ ஆய்வுக்கு பிறகு கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய சைபர் கிரைம் காவல்துறை திட்டமிட்டுள்ளது.