Juvenile-offender PT WEB
குற்றம்

ஒரே வருடத்தில் 160 சிறார்கள் கைது.. குற்றச் சம்பவங்களின் தலைநகராக மாறிவரும் டெல்லி!

பரபரப்பாக இயங்கி, ஹை செக்யூரிட்டி நகரமாக திகழும் தலைநகர் டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகளவு நடைபெற்று வருவது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. குற்றச்சம்பவங்களில் 18 வயது நிரம்பாத சிறார்கள் அதிகளவில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

PT WEB

டெல்லியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து, சிறார்கள் அதிகமாக ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் வரை 160 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் சிறார்கள் தொடர்புடையதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சமூக சூழல், போதை பழக்கம் போன்ற காரணங்களால் இவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

டெல்லியில் காற்று மாசுபாடானது ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியிருக்கும் நிலையில், குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ள இடமாகவும் டெல்லி மாறியிருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

முன்னதாக, 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தலைநகர் டெல்லியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த குற்ற வழக்குகளில் பெருபாலான சம்பவங்களில் சிறார்கள் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அதிர்ச்சிகர தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.

அதாவது டெல்லி காவல் துறையினரின் அறிக்கைபடி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, 101 கொலை வழக்கு, 92 பாலியல் வன்கொடுமை வழக்கு, 157 வழிப்பறி வழக்கு, 161 கொலை முயற்சி வழக்கு, 139 காயப்படுத்திய வழக்குகள் மற்றும் 460 கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் என பல்வேறு வழக்குகள் சிறுவர்கள் மேல் பதிவாகியுள்ளன.

Delhi_Police

கொலைக்காக 190க்கும் மேற்பட்ட 18 வயது நிரம்பாத சிறார்களும், கொலை முயற்சிக்காக 288 பேரும், கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் 268 பேரும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 101 பேரும், காயப்படுத்திய வழக்குகளில் 220 பேரும் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக 575 பேர் கொள்ளை மற்றும் திருட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அளித்த தகவலில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் தலைநகர் முழுவதும் 14 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் கொலை வழக்கில் 17 சிறார்களுக்கு தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதில் கொள்ளை மற்றும் வழிப்பறி குற்றங்களை செய்ய சொல்லி சிறார்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர் எனவும், பயம் காரணமாகவே அவர்கள் சில குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிகிறது. மேலும் சில வழக்குகளில் சிறிய கைகலப்பு பிரச்னையாக தொடங்கி அது மரணத்தில் முடிந்துள்ளதாகவும் , ஒரு சில வழக்குககளில் கொலை குற்றங்கள் நடக்க உதவியாக இருந்தது மற்றும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்தது போன்று இரண்டாம் நிலை குற்றவாளிகளாக உள்ளதாகவும், அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்.

குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து சரியான புரிதல் இல்லாததும், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு போதை பழக்கங்களுக்கு அடிமையாவது, சமூக வலைதளங்கள் ஆபாசதளங்களாக மாறிவருவது மற்றும் குடும்ப சூழல் காரணமாகவும் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்பது விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது. குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டால் தங்களுக்கு 18 வயது நிரம்பாத காரணத்தால் விரைவில் வெளியே வந்துவிடுவோம் என்பதை அறிந்தே இதுப்போன்ற செயல்களில் சிறார்கள் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

CRIME

தலைநகர் டெல்லி போன்ற பரபரப்பான நகரத்தில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, காவல்துறையினர் கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

-ராஜ்குமார் . ர